Saturday, October 27, 2012

தேமுதிகவில் அடுத்தடுத்து ஷாக் : மேலும் 2 எம்எல்ஏ ஜெயலலிதாவுடன் சந்திப்பு:இதுதான் முக்கிய பிரச்னையா?: ஏர்போர்ட்டில் விஜயகாந்த் கோபம்!

Saturday, October 27, 2012
சென்னை::தேமுதிக எம்எல்ஏக்களில் மேலும் 2 பேர் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து பேசினர். அடுத்தடுத்து நடக்கும் சந்திப்புகளால் தேமுதிக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவும் தேமுதிக பொருளாளருமான சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று கோட்டையில் சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் இருவரும் புகழ்ந்து பேசினர். கட்சித் தலைமையின் அனுமதியின்றி 2 எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து    பேசியது தேமுதிகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்றும் 2 தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து பேசினர். முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் கோட்டைக்கு வந்தார். அவரை தேமுதிக எம்எல்ஏக்கள் நடிகர் அருண்பாண்டியன் (பேராவூரணி), சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்) ஆகியோர் சந்தித்து, தங்களது தொகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனுவை கொடுத்தனர். போட்டோவுக்குபோஸ் கொடுத்துவிட்டு, முதல்வர் ஜெயலலிதாவுடன் இருவரும் சிறிது நேரம் தனியாக பேசினர். அடுத்தடுத்த நாட்களில் தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் தேமுதிக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திரையுலகில் விஜயகாந்தின் நண்பராக இருந்த அருண்பாண்டியன், கடந்த சட்டசபை தேர்தலில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக பதவியேற்ற சில நாட்களிலேயே விஜயகாந்த்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில்கூட பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. அதேபோல, விஜயகாந்துடன் நெருக்கமாக இருந்த சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு, ராதாபுரம் தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டது. அவரும் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக ஒதுங்கியிருந்தார். இப்போது இருவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளனர். இதேபோல அதிருப்தியில் இருக்கும் மேலும் சில தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதான் முக்கிய பிரச்னையா? : ஏர்போர்ட்டில் விஜயகாந்த் கோபம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, முதல்வரை தேமுதிக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ‘‘நாட்டுக்கு இதுதான் இப்போது முக்கியமான பிரச்னையா? தமிழகமே இருளில் மூழ்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த காலத்திலும் இல்லாத கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதை ஜெயலலிதாவிடம்போய் கேளுங்கள். ஜெயலலிதாவிடம் மின் தடை பற்றி கேட்பதை விட்டுவிட்டு, என்னிடம் வந்து நாட்டு மக்களுக்கு ஏதோ முக்கியமான பிரச்னை நடந்துவிட்டதுபோல் கேட்கிறீர்களே?’’ என்று கோபமாக கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment