Monday, September 24, 2012

Monday, September 24, 2012
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சென்ற இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாடு திரும்பியமை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்குவதாக அவுஸ்திரேலியாவின் துணை எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.


கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இலங்கையின் 18 புகலிடக் கோரிக்கையாளர்களை மேலதிக பரிசீலனைக்காக பசுபிக் தீவான நௌருக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முற்பட்டபோது தாம் இலங்கை  திரும்புவதற்கு விரும்புவதாக அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் தீவில் இருந்து அவர்கள்  இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.

இதனிடையே அவுஸ்திரேலியா தொலைக்காட்சியொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா துணை எதிர்கட்சி தலைவர் ஜூலி பிஷப் கடந்த மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்த நடைமுறை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நௌரு தீவுக்குச் சென்றால் தண்டனையில் இருந்தும் உயிராபத்தில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை அறிந்தும் அவர்கள் இலங்கை திரும்ப இணக்கம் தெரிவித்தமை பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறியதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர குடியேற்ற அனுமதி வழங்காமல் சொந்த நாட்டில் ஆபத்து நீங்கும் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதை அனுமதிக்கும் தறிகாலிகமாக வீசாக்களை அவுஸ்திரேலியா அரசு வழங்க வேண்டும் எனவும் ஜூலி பிஷப் யோசனைத் தெரிவித்துள்ளார்.

ஆபத்து ஏற்படாது என உறுதி செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கையையும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தமை சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபடும் குற்றக்கும்பல்களை ஒடுக்குவதில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment