Friday, September 28, 2012

நெல்லியடியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடியுடன் மோட்டர் சைக்கிளில் சென்றவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கை!

Friday, September 28, 2012
இலங்கை::நெல்லியடியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடியுடன் மோட்டர் சைக்கிளில் சென்றவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.காமினி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் அவர் இவ்விதம் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

புலிக்கொடியுடன் மோட்டர் சைக்கிளில் சென்றவர்கள் தொடர்பாக துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றன. இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புலிக்கொடி விவகாரம் தொடர்பாக இரு சந்தேக நபர்களைத் தேடி வருகின்றோம். அவர்கள் தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் இவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ். அச்சுவெலி கலைமதி புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் சிறிக்குகநேசன் தெரிவித்துள்ளர்.

இச்சம்பவத்தில் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபரான 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியை சிறுவர் நன்னடத்தைப் பரிவில் சேர்க்குமாறு அச்சுவெலி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ். குடாநாட்டில் வீடு உடைத்து கொள்ளையிடும் சம்பவங்கள் திடிரென அதிகரித்திருப்பதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.

கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.

கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ். உதயன் முன்னாள் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சட்ட மா அதிபரிடம் இருந்து பதில் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என சிறிகுகநேசன் தெரிவித்தார்.

உதயன் குகநாதன் வழக்கு தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைப் பெறுவதற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். ஆனாலும் இதுவரை திணைக்களத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதற்கான உரிய பதில் எமக்கு கிடைக்கவில்லை.

அதனால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பதில் கிடைக்குமிடத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் சட்டத்தரணி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்கும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சட்ட மா அதிபர் திணைக்களமே பதில்தர வேண்டும். ஆனால் அதற்கான பதிலும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment