Saturday, September 01, 2012சென்னை::இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க அனுமதித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளவர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த செந்தூரானுக்கு ஆதரவாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்துக்கு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை வகித்தார். தேசிய செயலாளர் டி.ராஜா பேசியதாவது: தமிழர்களை அழித்த இலங்கை ராணுவத்துக்கு இங்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழர்களுக்கு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் துரோகம் செய்கிறது. இது வரலாற்றில் அழிக்க முடியாத கரையாகும். இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் புனரமைப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. புனரமைப்பு பணி என்ற பெயரில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்களர் குடியேற்றம்தான் நடக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் அவர்கள் வழிபாட்டு தலங்கள், கலாசார அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் உச்சகட்ட போர் நடந்தபோது, இந்த போரை இந்திய அரசுதான் நடத்தியது என்று ராஜபக்சே வெளிப்படையாக தெரிவித்தார். அப்போது மறைமுகமாக இலங்கைக்கு ஆதரவளித்த இந்திய அரசு, இப்போது வெளிப்படையாக மீதமுள்ள தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கிறது. தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படுத்திவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைச் செய லாளர் மகேந்திரன், தென்காசி எம்.பி. லிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் சம்பத், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், தொழிற்சங்க பிரிவு தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன் உள்பட 500,க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் உண்ணாவிரத போராட் டம் நடந்தது.
No comments:
Post a Comment