Monday, September 24, 2012
சென்னை::இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியான சினிமா படத்துக்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது. இதனால் அமெரிக்க தூதரகம் உள்ள நாடுகளில் முஸ்லீம்கள் முற்றுகை போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பு முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதில், தூதரகத்தின் மீது கல்வீச்சு நடந்தது. இதையடுத்து தூதரகத்துக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டது.
இருப்பினும், தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் விடுமுறை நாட்கள் நீடிக்கப்பட்டன. இதனால் விசா பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், அமெரிக்க துணை தூதரகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் கடந்த 20-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தூதரகத்துக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீஸ் கமிஷனர் அதை ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இருப்பினும், விசா கொடுக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்றுமுதல் விசா கொடுக்கும் பணி தொடங்கியது. இதை அறிந்ததும் காலையிலேயே சென்னை அமெரிக்க துணை தூதரகம் முன்பு குவிந்தனர். 8 நாட்களுக்கு பிறகு விசா கொடுக்கும் பணி தொடங்கியதால் விசா பெற விண்ணப்பம் செய்திருப்பவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment