Saturday, September 29, 2012

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை!

Saturday, September 29, 2012
மதுரை::மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பாதுகாப்பு வழங்கவும், மத்திய அரசு மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.


மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தமிழக மீனவர்களுக்கு, முப்படை பாதுகாப்பு அளிக்க கோரி ஏற்கனவே நான் மனு செய்தேன். கடலோர காவல் படை தகுந்த பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது. ஆனால், மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. மத்திய கேபினட் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலாளர், கடலோர காவல்படை துணை இயக்குனர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

மேலும் சிலரும் இதுபோல மனு செய்தனர். மனுக்கள் நீதிபதிகள் வினோத் கே.சர்மா, ஏ.செல்வம் முன் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் செந்தில்வேலன், அரசு சிறப்பு வக்கீல் புகழேந்தி, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், லஜபதிராய் ஆஜராயினர். கடலோர பாதுகாப்புப் படை துணை இயக்குனர் எஸ்.கே.வர்கீஸ் தாக்கல் செய்த பதில் மனு:

பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நாட்டு மற்றும் இயந்திர மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து படகுகளுக்கும் ஜி.பி.எஸ்.,கருவிகள் பொருத்தலாம். தகவல் தொடர்புக்கு வயர்லெஸ் வழங்கலாம். அப்பகுதியில் 5 கலங்கரை விளக்குகள் உள்ளன. அவற்றை, சர்வதேச கடல் எல்லை தெரியும் வகையில், மாற்றியமைக்கலாம். பகலில் மீன் பிடிப்பவர்கள் அறியும் வகையில், சர்வதேச கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை மிதக்க விட வேண்டும். ஜி.பி.எஸ்., கருவி மூலம் மீனவர்கள் உள்ள கடல் பகுதி, அவர்கள் சர்வதேச கடல் எல்லையை கடந்துவிட்டனரா? எனவும், வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ளவும் முடியும். மாநில மீன்வளத்துறை, வயர்லெஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் சர்வதேச எல்லை வரை மொபைல்போன் பயன்படுத்த வழிவகை காணவேண்டும், என குறிப்பிட்டார். பீட்டர் ரமேஷ்குமார்:

சோமாலியா கடற்கொள்ளையர்கள், இத்தாலி கப்பல்படையால் மீனவர்கள் தாக்கப்பட்டனர். மத்திய அரசு சர்வதேச கோர்ட்டை நாடியது. தமிழக மீனவர் பிரச்னையில் பாரபட்சம் காட்டுகிறது.

லஜபதிராய்: பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

வில்சன்: இழப்பீடு வழங்குவது மாநில அரசின் பொறுப்பு. எல்லை தாண்டி நடக்கும் சம்பவங்களுக்கு, இந்திய கடலோர காவல்படையை பொறுப்பாக்க முடியாது. மீனவர்களை பாதுகாக்க, மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிறது.

புகழேந்தி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க, அந்நாட்டு கோர்ட்டில் வழக்குத்தொடர தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. மீனவர்களின் குடும்பத்திற்கு தினமும் 250 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் தீர்ப்பை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment