Sunday, September 02, 2012இலங்கை::தமிழ் இளைஞர்கள் கைகளில் ஆயுதம் ஏந்தத் தூண்டும் வீரவசனங்களைப் பேசுவதைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் முனகியது அப்பாவிமக்களே அல்லாது தலைவர்கள் அல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்துத் தமிழ் மக்களிடையே ஒருவிதமான அதிருப்தி நிலையும் வெறுப்புத் தன்மையும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகக் கூட்டமைப்பின் தலைவர்.
இரா சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. ஆர். சுமந்திரன், அரியநேந்திரன் ஆகியோர் தேர்தல் மேடைகளில் ஆற்றிவரும் உரைகள் அனைத்தும் தமிழ் மக்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் ஏந்தத் தூண்டும் வகையில் இவர்களது உரைகள் அமைந்து வருகின்றன.
மேடையில் சம்பந்தன் ஐயா பேசிவரும் வீர வசனங்கள் மீண்டும் தமிழின அழிவிற்கு அத்திபாரம் இடுவது போலிருந்தது எனப் புத்திஜீவிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதுமை ததும்பும் வயதில் இளம் சமுதாயத்தினருக்குப் புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்த வேண்டிய தலைவர் இன அழிவிற்கு மீண்டும் வழிவகுப்பது போன்று செயற்படுவது பொதுமக்கள் பலரதும் விசனத்திற்குள்ளாக்கிவருகிறது.
தள்ளாத வயதிலும் தமது இருப்பிற்காகத் தமிழ் இளைஞர்களை மீண்டும் உசுப்பேற்றி தமது அரசியல் சொகுசு வாழ்க்கையை தொடர்ந்தும் அனுபவிக்க சம்பந்தன் ஐயா கங்கணம் கட்டி நிற்பது அதன்மூலம் தெட்டத் தெளிவாகியுள்ளது. தமிழ் மக்கள் பட்ட துன்பம் ஆற முன்னர் மீண்டும் ஒரு போர்க் களத்தை உருவாக்க இவர் முனைகின்றார் எனவும் புத்திஜீவிகள் கவலை தெரிவித்தனர்.
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தமிழ்த் தலைவராக இருக்க வேண்டிய சம்பந்தன் ஐயா தமிழ் மக்களது இன்றைய மனநிலையை நன்கு தெரிந்திருந்தும் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வது கவலையளிப்பதாகவே உள்ளது. அரசாங்கத்திற்குச் சவால்விடும் சம்பந்தன் ஐயா கேட்டது கிடைக்காத பட்சத்தில் போராடுவதே மாற்று வழி என விழித்துள்ளமை மறைமுகமாகத் தமிழ் இளம் சமுதாயத்தினரை மீண்டும் ஆயுதம் ஏந்தக் கோருவதாகவே அர்த்தப்படுகிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புப் பேச்சு என அன்று தமிழ் இளைஞர்களை உங்களது நலனுக்காகப் பாவித்து ஆயுதம் ஏந்த வைத்து, இடைநடுவில் உங்களுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லாதது போன்று கபட நாடகமாடி, இன்று ஆயிரக்கணக்கில் தமிழ், இளைஞர்களைக் கொன்றுகுவித்தது போதாது என்று மீண்டுமொரு அழிவிற்கு வித்திட முயல்வது எதிர்காலத்தில் அபாயகரமான விளைவைவே தரும்.
எனவே சம்பந்தன் ஐயா இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ள முனைய வேண்டும். வட்டுக்கோட்டை தீர்மானம் எடுத்த காலம் முதல் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய புள்ளிகளாக உள்ளவர்கள் பலர் அன்று தமிழ் இளைஞர்களுக்குத் தவறான பாதையைக் காட்டி அவர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்தனர். இதன் மூலம் தாம் இன்றுவரை தமது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இது வேதனை தரும் விடயமாகும்.
தமிழ் இயக்கங்களுக்கிடையில் இடம்பெற்ற சகோதரச் சண்டைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் தமிழ் அரசியல் நடத்திய இந்த அரசியல்வாதிகளே முக்கியமான காரணமாகவும் இருந்துள்ளனர். தமது அரசியல் இருப்பிற்காக அன்று பல்கலைக்கழகம் சென்று படிக்க வேண்டிய தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்த இவர்கள் அந்த இளைஞர்களை சரியாக வழிநடத்தவில்லை. இவர்களுக்கு ஆவேசமான வீரவசனங்களைத் திணித்து சிங்கள அரசாங்கங்களுக்கு எதிராக போராட வைத்தனர்.
இவர்களது தவறான வழிநடத்தலில் படித்த மற்றும் கிராமத்து தமிழ் இளைஞர்கள் பலரும் இரையாகினர். அத்துடன், இந்தக் கொடிய யுத்தம் காரணமாகப் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டது. இன்று தமிழ் மக்களுக்கு சிறிது சிறிதாக இந்தத் தமிழ்த் தலைவர்களின் சுயநலப் போக்குகள் விளங்கி வருகிறது. சந்தர்ப்பவாத அரசியலை நடத்த இவர்கள் இவ்வளவு காலமும் புலிகளைப் பயன்படுத்தினர். இப்போது தமிழ் மக்களைப் பாவிக்க முனைந்து வருகின்றனர். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நாங்களே எனப் புலிகள் தெரிவித்தபோது மெளனம் காத்த இவர்கள் இன்று தாமே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனத் தெரிவிக்கின்றனர்.
அன்று புலிகள் ஏகப்பிரதிநிகள் இல்லை எனத் தெரிவித்த கூட்டணியின் ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் போன்றோர் இன்று ஏகப்பிரதிநிதிகளாக யார் வேண்டுமானாலும் இருங்கள், அரசாங்க சலுகைகளின்போது எம்மையும் சேர்த்துக் கொள்ளுங்கள் எனுமளவிற்கு அரசியலை நடத்தத் துணிந்துள்ளதாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது பதவிக் காலத்தின் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோது இந்தத் தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பேசுவார்கள் எனநினைத்தார். ஆனால் அதில் சென்ற தலைவர் உட்பட கலந்து கொண்ட உறுப்பினர்கள் பலரும் தம
து சொந்த நலனுக்காகவேபேசியதையிட்டு மனவருத்தம் அடைந்தார் என அப்போது செய்திகள் தெரிவித்தன.
அதில் சென்ற தமிழ் மக்களின் பிரநிதிகள் சிலர் தமது குடும்பங்கள் ஐரோப்பிய நாடுகளில் குடியேற விஸா பெற்றுத் தருமாறு கேட்டனர் இன்னும் சிலர் தமது பிள்ளைகளுக்கு அரச புலமைப்பரிசில் வழங்கி லண்டனுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டனர். மேலும் சிலர் இந்தியாவிலுள்ள தமது மனைவி பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்ப உதவுமாறு கேட்டனர். அதிர்ச்சியில் உறைந்த சந்திரிகா அம்மையார் செயலாளர் மூலமாக இவர்கள் கேட்டதைச் செய்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழ்த் தலைவர்கள் இவ்வாறுதான் கஷ்டப்பட்டு பேச்சுவார்த்தை, நடத்தி வந்துள்ளனர். இது மட்டுமா பாராளுமன்றத்தில் அரச தரப்பு அமைச்சருடன் எதிரும் புதிருமாக இருப்பது போலப் பாசாங்கு செய்வார்கள். அங்கு இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் தமது உறவினர்களுக்காக அந்த அமைச்சர்களின் கால்களைப் பிடித்தாவது காரியத்தைச் சாதிப்பார்கள். சிலர் இவ்வாறு அமைச்சர்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி கையெழுத்து வாங்கி அப்பாவி இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணம் கறந்து வெளிநாடுகளுக்கு அனுப்பியும் உள்ளனர்.
தலைவர் முதல் தொண்டர்வரை இதனையே செய்வதால் யாரை யார் பிடிப்பது?யாரை யார் குற்றம் சாட்டவது? மொத்தத்தில் தமிழ் மக்களை வைத்து தமிழ் அரசியல் நடத்திவரும் அரசியல்வாதிகள் இன்றுவரை இவ்வாறுதான் தந்திரமாகக் காய்நகர்த்தி வருகிறார்கள்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் வேளைகளில் மெளமாக இருந்து விட்டு வெளியே வந்து அரசாங்கத்தைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. பேச்சுக்குச் செல்லும்போதே மக்களுக்குள்ள குறைபாடுகள், தேவைகள் குறித்து அறிந்து வைத்து அவற்றை அரச தரப்பிற்கு எடுத்துக் கூறி தீர்வுகாண்பதே சிறந்த வழியாகும். ஆனால் மூன்று தடவைகள் அரச தரப்புடன் பேச்சுக்களை நடத்திய கூட்டமைப்பு இதனை ஒரு தடவையேனும் செய்யவில்லை.
அரசாங்கம் தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்துவரும் வேளையில் கூட்டமைப்பினர் நடத்திவரும் பேசச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது. தமது சந்திப்புத் தொடர்பாக தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்கள் மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதிலும் கூட்டமைப்பினரை மிஞ்ச எவராலும் முடியாது.
முப்பது வருடங்களாக தமிழ்த் தலைமைகள் விட்ட தவறை இனியும் இன்றைய தமிழ்த் தலைவர்களும் விட்டால் தந்தை செல்வா அவர்கள் தெரிவித்தது போன்று தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
எனவே கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக அறிக்கை தயாரித்து இணையத்தளங்களுக்கு வழங்கி புலம் பெயர் சமூகத்தின் ஆதரவைத் தேடாமல் உள்நாட்டிலுள்ள உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய எத்தனிக்க வேண்டும். புலம்பெயந்தவர்களால் உங்களுக்கு என்ன இலாபம்? தேர்தல் காலங்களில் செலவுக்குப் பணம் கொடுத்தால் அவர்களுக்கு பயப்பட வேண்டுமா என்ன? உள்ளூரில் வாக்களித்த மக்கள் உங்களை இப்போது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இனியும் அவர்கள் வாக்குகளை அளித்துவிட்டு ஏமாறத் தயாரில்லை.
இதுவரை காலமும் அரசாங்கத்துடன் எதிர்ப்பாக நின்றதனால் எதனையும் செய்யமுடியவில்லை என கூட்டமைப்பிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டதுண்டு. ஆனால் இன்று அவ்வாறு தட்டிக்கழிக்க முடியாது. நீங்கள் இதய சுத்தியுடன் ஒரே முகத்துடன் நடந்து கொண்டால் அரசாங்கம் உங்களை நம்பி சகலவற்றையும் செய்யும் என உங்களை விட உங்களுக்கு வாக்களித்த மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே இணையத் தளங்களைத் துறந்து இணையற்ற உங்கள் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற இனியாவது முனவாருங்கள்.
No comments:
Post a Comment