Wednesday, September 26, 2012

காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் பிரதமர் முடிவை ஏற்காதது ஏன்? முதல்வர் ஜெயலலிதா விளக்கம்!

Wednesday, September 26, 2012
சென்னை::முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நதிநீர் ஆணைய தலைவர் பிரதமர் மன்மோகன் சிங், தினமும் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் 25 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்ற கூறிய போது, கர்நாடகம் உடன்படவில்லை. தமிழக அரசு 9,000 கன அடி தண்ணீர் வழங்குவதை ஏற்றுக் கொண்டு, அது போதாது மேலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். தமிழகத்துக்கு கர்நாடகா உரிய தண்ணீரை திறந்து விடாததால், பயிர் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட்டதோடு, 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இடர்பாடு பங்கீட்டு முறைப்படி, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 2 டிஎம்சி வீதம் 24 நாட்களுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பான வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீருக்கும் குறைவாக பிரதமரின் தீர்ப்பு அமைந்துள்ளதால், அந்தத் தீர்ப்பு ஏற்க கூடியதல்ல என்றும் தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கர்நாடகா சார்பில் ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குறைந்தபட்சம் இடர்பாடு பங்கீட்டு முறையின்படி, தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடங்குளம் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுக்களின் அறிக்கைகளை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பதால், அணுமின் நிலைய பணிகளை தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். தென் மாநிலங்களில் கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, மின் மிகை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற கூடிய சூழ்நிலை என்பது அறவே இல்லை என்பதுதான் உண்மை நிலை. எனவே, முரண்பாடான அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment