Monday, September 03, 2012சென்னை::இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற அனுமதி வழங்கிய, நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமீபத்தில் இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினேன். மத்திய அரசு இதற்கு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இது போன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியதாக எனக்கு தகவல் வந்தது. இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன்.
பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் ஒருவர் இந்த போட்டிக்காக வாய்மொழியாக அனுமதி கேட்க, நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது. எனவே, நேரு ஸ்டேடிய அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது; அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன். இதே போன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோரையும் திருப்பிஅனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு கூறப்பட் டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்திலும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லன்ஸ் விமானத்திலும் இலங்கை மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment