Sunday, September 2, 2012

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 24 பேர் நாளை ஊர் திரும்புகின்றனர்!

Sunday, September 02, 2012
நாகை::இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 24 பேரும் நாளை இரவு ஊர் திரும்புகின்றனர்.
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் சசிக்குமார், வெற்றிச்செல்வன், ராமன், கவிமணி. விசைப்படகு உரிமையாளர்கள். இவர்களது படகில் தலா 6 பேர் வீதம் 24 மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் நாளை (3ம் தேதி) நாகை துறைமுகம் வந்து சேர வேண்டும். இந்நிலையில் நேற்று காலை இந்திய , இலங்கை கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, காங்கேசன் துறைமுகத்தை சேர்ந்த இலங்கை கடற்படையினர் 4 படகையும் சுற்றி வளைத்தனர். பின்னர் 4 படகிலும் ஏறி சோதனையிட்டனர். இலங்கையில் தடை செய்யப்பட்ட சங்குகள் படகுகளில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். காங்கேசன் துறைமுகத்தில் 24 மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள சங்குகளை இந்திய கடல் எல்லையில் தான் பிடித்தோம் என்றும் காற்றின் போக்கில் திசைமாறி இலங்கை கடல் எல்லைக்கு வந்து விட்டோம் என்றும் நாகை மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 24 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று மாலை விடுவித்தனர். மீனவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி நாளை (3ம் தேதி) இரவுக்குள் நாகை திரும்புவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment