Tuesday, August 28, 2012

ஓணம் பண்டிகை: முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து!

Tuesday, August 28, 2012
சென்னை::முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருவோணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமால், வாமன அவதாரம் பூண்டு மகாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி ஆண்டுதோறும் மக்களை தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார்.

அதன்படி மக்களைக் காணவரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

திருவோணம் பண்டிகையின் போது மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் பத்து நாட்களுக்கு அரிசி மாவினால் அழகிய கோலமிட்டும், அக்கோலத்தை வண்ணப் பூக்களால் அலங்கரித்தும், குத்து விள்ககேற்றியும் மனம் மகிழந்து கொண்டாடுவார்கள்.

இப்பண்டிகையின்போது ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும். ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இவ்வோணம் பண்டிகை உணர்த்துகிறது. இந்த இனிய திருநாளில் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி்க் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment