Friday, August 31, 2012

கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் ரூ17 லட்சம் மதிப்புள்ள செயின்கள் கடத்தல் : இலங்கை பயணி இருவர் கைது!

Friday, August 31, 2012
மீனம்பாக்கம்::கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கடத்திய இலங்கை பயணிகள் இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னை வந்தது. அதில், தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிஷாந்தன் (25), ரூபராஜன் (30) ஆகியோர் சுற்றுலா விசாவில் சென்னை வந்தனர். அவர்கள், ‘சுங்க வரி செலுத்துவதற்கான பொருட்கள் எதையும் நாங்கள் எடுத்து வரவில்லைÕ என்று கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து மீண்டும் தீவிரமாக சோதித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் எதுவும் சிக்கவில்லை. இருவரும் கோட் அணிந்திருந்தனர். அதை தடவி பார்த்தபோது, காலர் பகுதியில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. கோட்டை கழற்றி பார்த்த போது, கறுப்பு கார்பன் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த நீளமான பொட்டலம் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 520 கிராம் புத்தம் புதிய தங்க செயின்கள் இருந்தன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.17 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். தங்க செயின்களை கொடுத்து அனுப்பியது யார், யாரிடம் கொடுக்க சென்னை வந்தனர், இதற்கு முன்பாக இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டார்களா என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment