Tuesday, July 3, 2012

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் திருமணத்துக்கு தடை!

Tuesday, July 03, 2012
சென்னை::சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த சென்னை ஐகோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் பிரமாண்டமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களையும் நடத்தினர். அண்ணா நூலகத்தை இடம் மாற்றுவதற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை விதித்தது. மேலும், தற்போதைய நூலகத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்றும் ஐகோர்ட் உத்தர விட்டிருந்தது.

இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக நூலக அரங்கில் பல மாற்றங்களை செய்திருந்தனர். கார் பார்க்கிங் பகுதி, விருந்து அரங்கமாக மாற்றப்பட்டிருந்தது. நுழைவாயிலில் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. திருமண விருந்தால் வளாகம் முழுவதும் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. குப்பைகளும் குவிந்திருந்தன. இதுபற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வெளியாயின. இந்த பிரச்னை ஐகோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது என கோர்ட் தடை விதித்துள்ளது.

ஆனால், நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்றார். தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகி, ‘எதிர்காலத்தில் எந்த திருமண நிகழ்ச்சியும் நடத்த மாட்டோம்’ என்று கூறி சில கோப்புகளை தாக்கல் செய்தார். அந்த கோப்புகளை பரிசீலித்த நீதிபதிகள், ‘‘செப்டம்பர் 9-ம் தேதி திருமணம் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கிறோம். திருமணத்துக்காக பெற்ற முன்பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நூலகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்க கூடாது. இதற்கு தடை விதிக்கிறோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment