Wednesday, July 25, 2012

இந்திய அணி "சரண்டர்!': இலங்கைக்கு முதல் வெற்றி!

Wednesday,July 25, 2012
இலங்கை::அம்பாந்தோட்டை: இரண்டாவது ஒருநாள் போட்டியில், பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. சொந்த மண்ணில் எழுச்சி பெற்ற இலங்கை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என, முன்னிலையில் இருந்தது. நேற்று இரு அணிகள் இடையிலான, இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இலங்கை அணியில் காயமடைந்த குலசேகராவுக்குப் பதில், இஸ்ரு உதனா அறிமுக வீரராக களமிறங்கினார்.

நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி மீண்டும் துவக்கம் தந்தது. உதனா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில், 2 பவுண்டரிகள் விளாசினார் சேவக். உதிரிகள் 5 உட்பட, இந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் கிடைத்தது. மலிங்காவின் முதல் ஓவரில், காம்பிர் தன்பங்கிற்கு 2 பவுண்டரி அடிக்க, இந்திய அணி 3 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்தது.

விக்., மடமட: இதன் பின் எல்லாம் அப்படியே தலை கீழானது. முதலில் சேவக் (15) அவுட்டாகி, சரிவைத் துவங்கி வைத்தார். இலங்கைக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்த விராத் கோஹ்லி, இம்முறை வந்த வேகத்தில், ஒரு ரன்னுடன் நடையை கட்டினார்.

ரோகித் சொதப்பல்: கடந்த போட்டியை போல, இம்முறையும் மாத்யூஸ் பந்தில் போல்டாகிய ரோகித் சர்மா (0), ரசிகர்களை வெறுப்பேற்றினார். பின் வந்த ரெய்னாவையும் (1) "போல்டாக்கி' அனுப்பி வைத்தார் பெரேரா. இந்திய அணி 41 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அஷ்வின் ஆறுதல்: "டக்' வாய்ப்பில் இருந்து தப்பிய தோனி, 11 ரன்னுக்கு திருப்தியடைந்து திரும்பினார். இர்பான் பதானும், தன்பங்கிற்கு 6 ரன்கள் மட்டும் எடுக்க, இந்திய அணி 100 ரன்களை கடப்பதே சிரமம் ஆனது. அடுத்து வந்த அஷ்வின், வழக்கம் போல பேட்டிங்கில் சற்று ஆறுதல் தந்தார். மலிங்கா, உதனா, ஹெராத் பந்துகளில் பவுண்டரிகள் அடித்த அஷ்வின் (21), தேவையில்லாமல் மூன்றாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு, விக்கெட்டை பறிகொடுத்தார்.

காம்பிர் அரைசதம்: ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதும், துவக்க வீரர் காம்பிர் ஒன்றும் இரண்டுமாக ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். ஜாகிர் கான் (2), பிரக்யான் ஓஜா (5) நிலைக்கவில்லை. மனம் தளராமல் போராடிய காம்பிர், தனது 32வது அரைசதம் கடந்தார். இவர், 65 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி 33.3 ஓவரில், 138 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் பெரேரா, மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

"சூப்பர்' துவக்கம்: போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு, சேவக் உதவியால் "சூப்பர்' துவக்கம் கிடைத்தது. கடந்த போட்டியில் தில்ஷன், "கேட்ச்சை' கோட்டைவிட்ட சேவக், இம்முறையும் பந்தை கை நழுவ விட்டார். சுதாரித்துக் கொண்ட தில்ஷன், உமேஷ் யாதவ் ஓவரில், அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். இவரது சகா தரங்கா, ஜாகிர் கான் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இவர்களை பிரிக்க தோனி எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடித்த தில்ஷன் (50), அஷ்வினிடம் சிக்கினார். மறுமுனையில், தன் பங்கிற்கு அரைசதம் அடித்த தரங்கா, வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 19.5 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரங்கா (59), சண்டிமால் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், தற்போது 1-1 என, சமனில் உள்ளது.

No comments:

Post a Comment