Wednesday, July 25, 2012

இலங்கையில் இருந்து படகில் வந்தவர்கள் விடுதலை புலிகளா?

Wednesday,July 25, 2012
மண்டபம்::இலங்கையில் இருந்து படகில் வந்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கரை ஒதுங்கி தலைமறைவான மூன்று பேர், புலிகளா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மண்டபம் வேதாளை ஊராட்சி குறவன்தோப்பு கடற்கரையில், நேற்று முன்தினம் அதிகாலை, இலங்கை பிளாஸ்டிக் படகு கேட்பாரற்று நின்றது. அப்பகுதி மக்களின் தகவலையடுத்து, கியூ பிரிவு போலீசார் படகை சோதனையிட்டனர். இதில், அது, இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரியவந்தது.

படகில் இன்ஜின் இல்லாததால், அதை கடற்கரை மணலில் புதைத்து வைத்துள்ளனரா என போலீசார், அந்த பகுதி முழுவதும் சோதனையிட்டனர். ஆனால், இன்ஜின் கிடைக்கவில்லை.கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "படகு காற்றில் திசைமாறி வந்ததாக தெரியவில்லை. படகில் வந்தவர்கள் சாவகாசமாக நங்கூரமிட்டு, படகை நிறுத்தி உள்ளனர். இதில் இருந்து கழற்றிய இன்ஜினை எங்கோ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இப்பகுதியில் விசாரணை செய்ததில் சரியான தகவல் தெரியவில்லை. ஆனால், இலங்கையர் படகில் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார். படகில் மூன்று நபர்கள் வந்து இறங்கிச் சென்றதாக, கடலோரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். வந்தது இலங்கையர்களா? அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பதிலும் தெளிவு ஏற்படவில்லை. மேலும், இலங்கை படகில் வந்ததன் மூலம், இலங்கையர் என நம்ப வைப்பதற்காகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. வந்தவர்கள் சர்வசாதாரணமாக படகை நிறுத்திவிட்டுச் சென்றது, கடலோர பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தொய்வு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment