Saturday, July 7, 2012

21 நாட்களாக நீடித்த செங்கல்பட்டு அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்!

Saturday, July 07, 2012
செங்கல்பட்டு::செங்கல்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகள், கடந்த 21 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.
செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 32 பேரில் 22 பேர், தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். தொடர் உண்ணாவிரதத்தால் மயங்கி விழுந்த 11 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள், உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர், முகாமுக்கு எதிரே போராட்டம் நடத்தினர். ஊர்வலம், மறியல் போராட்டமும் நடந்தது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த 4 பேரை க்யூ பிரிவு போலீசார் விடுதலை செய்தனர். மற்றவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர், மேற்கொண்டு சிகிச்சையை ஏற்க மறுத்துவிட்டனர். ஆர்டிஓ செல்லப்பா தலைமையில் இருகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் க்யூ பிரிவு எஸ்பி சம்பத்குமார், டிஎஸ்பி ராமசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் உத்தமன், ஆர்டிஓ செல்லப்பா, தாசில்தார் இளங்கோ ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அகதிகளை சந்தித்தனர். ‘அரசிடம் பேசி படிப்படியாக உங்களை விடுதலை செய்கிறோம்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். 11 மணியளவில் ஆர்டிஓ செல்லப்பா ஜூஸ் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் முகாமில் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமரசத்தை ஏற்க மறுத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு 12 மணியளவில் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். 21 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போராட்டம் நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment