Wednesday, June 20, 2012

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் மகளிர் தலைவி தமிழினி விரும்பினால் அவருக்கு புனர்வாழ்வளிக்க ஆட்சேபனை இல்லை-சட்ட மா அதிபர்!

Wednesday, June 20, 2012
இலங்கை::தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மகளிர் தலைவி என கருதப்படும் தமிழினி விரும்பினால் அவருக்கு புனர்வாழ்வளிக்க ஆட்சேபனை இல்லை என சட்ட மா அதிபர் இரகசிய பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழினி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இரகசிய பொலிஸார் சட்ட மா அதிபர் தமக்கு வழங்கிய ஆலோசனையை கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தனர்.

கடந்த 15ம் திகதி சட்ட மா அதிபர் தமக்கு இந்த ஆ​லோசனையை வழங்கியதாக இரகசிய பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை சமர்பித்து நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழினியிடம் விருப்பத்தை கேட்டறியவென அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறை கூண்டுக்குச் செல்ல அனுமதி தேவை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்று இரகசிய பொலிஸ் பிரிவின் அதிகாரி ஜனாக டி சில்வாவிற்கு வெலிக்கடை சிறைக்குச் செல்ல அனுமதியளித்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி, ஜனாக டி சில்வாவுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் தமிழினி பல காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் 22ம் திகதிக்கு முன்னர் அவரிடம் விருப்பம் கேட்டு நீதிமன்றிற்கு அறிவிக்கும்படி நீதவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment