Saturday, June 16, 2012

ஜே.வி.பி.யினர் கொலை தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப்பு:-22 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு!

Saturday, June, 16, 2012
இலங்கை::அம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கூட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி கூட்டத்தின்போது இணந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

ஹம்பாந்தோட்டை, கட்டுவன பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கூட்டமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 22 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கென பொலிஸ் குழுக்கள் சில ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தற்போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் தற்போது கட்டுவன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிரதேசத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விசேட பொலிஸ் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment