Saturday, June, 16, 2012மதுரை::இரு வழக்குகளில் மைசூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நித்யானந்தா, இன்று அதிகாலை மதுரை ஆதீன மடத்துக்கு வந்தார்.
கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை, அரசு சீல் வைத்துள்ளது. அங்கிருந்த நித்யானந்தா சீடர்கள் வெளியேறி வருகின்றனர். பத்திரிகையாளர்களை தாக்கியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது ஆகிய இரு வழக்குகளில் கர்நாடக போலீசார் நித்யானந்தாவை கைது செய்தனர். அவர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். இரு வழக்கிலும் ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்றிரவு சிறையில் இருந்து நித்யானந்தா விடுதலை செய்யப்பட்டார்.
பிடதி ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளதால், நித்யானந்தா அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், நேற்றிரவு மைசூரில் இருந்து காரில் மதுரை ஆதீன மடத்துக்கு புறப்பட்டார். நித்யானந்தாவும், அவரது சீடர்களும் இரு கார்களில் இன்று காலை 5.30 மணிக்கு மதுரை ஆதீன மடத்துக்கு வந்து சேர்ந்தனர். நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் சந்திக்க முயன்றனர். அதற்கு நித்தியானந்தாவின் சீடர்கள் அனுமதி மறுத்தனர்.
பின்னர், இனிமேல் நித்யானந்தா பத்திரிகையாளர்களை நேரடியாக சந்திக்க மாட்டார். ஆதீன மடத்திலிருந்து செய்திகள் அறிக்கையாக வந்து சேரும். தேவைப்பட்டால் முதன்மை சீடர் ஞான சொரூபானந்தா பத்திரிகையாளர்களை சந்திப்பார் என சீடர்கள் சொல்லி அனுப்பினர். பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து தான் நித்யானந்தா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment