Saturday, June 23, 2012மதுரை::மதுரை ஆதீன மடத்தில் யானை தந்தங்கள், புலித்தோல் இருப்பது தொடர்பாக, மடத்தில் சோதனை நடத்த போலீசாரும், வனத்துறையினரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அனுமதி பெறும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன். இவர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது: வழிபாட்டிற்காக நண்பர்களுடன் நான், மே 12ம் தேதி மதுரை ஆதீன மடத்திற்கு சென்றோம். அனைவருக்கும் பரிசுத்த நீர் என்று கூறி ஒரு திரவத்தை குடிக்க கொடுத்தனர். அதை குடித்ததும் உயர்நிலையை அடைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. உடல் இறகு போல் இலகுவானது. ஆங்கில பாடல் இசையுடன் ஒலிக்கப்பட்டது. ஒலி கேட்டதும் அங்கிருந்தவர்கள் யோக நிலைக்கு சென்று இசைக்கு ஏற்ப அசைந்தாடினர். அதில் இணைந்து ஆடுமாறு எங்களிடம் நித்யானந்தா கூறினார். நாங்கள் மவுனமாக தலை அசைத்தோம். பின்னர், பத்துக்கும் அதிகமான புலித்தோல்களை தரையில் விரித்தனர். நீண்ட யானை தந்தங்களையும் தரையில் வைத்தனர். யானை தந்தங்களை தலையணையாக வைத்து நித்யானந்தா படுத்தார். நடிகை ரஞ்சிதாவும் அப்போது இருந்தார். அந்த செயல்கள் பிடிக்காமல் நாங்கள் மடத்தை விட்டு வெளியேறி, அங்கு நடந்த விஷயங்களை கூறி, நித்யானந்தா, ரஞ்சிதா, அருணகிரி உதவியாளர் வைஷ்ணவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. என் புகாரின் பேரில் நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.செல்வம், ‘மனுதாரர் புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப் போகிறார்களா? அல்லது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா? என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். பிற்பகல் மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, ‘நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்று அரசு வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று மாலை நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மடத்தில் சோதனை நடத்த, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அனுமதி பெற முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அனுமதி பெற்றதும், வனத்துறையினரும், போலீசாரும் ஆதீன மடத்திற்குள் நுழைந்து சோதனை நடத்த உள்ளனர். இதற்காக மடத்தின் இரு வாசல்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment