Tuesday, June, 12, 2012இலங்கை::கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பொந்தர்குடியிருப்புப் பகுதியின் மீள்குடியேற்றம் தொடர்பில் இன்று ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கிராம மக்களை அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
ஹலோறஸ்ட் நிறுவனத்தினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மீள்குடியேறத் தயாராக உள்ள அறுபது குடும்பங்களை அங்கு மீள்குடியேற்றுவது தொடர்பிலும் அவர்களுக்கான தற்காலிக வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளான வீதி குடிநீர் வசதி மலசலகூடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்து பாதுகாப்பாக மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இன்னும் ஒரு சில நாட்களில் மீள்குடியேற்ற திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன் பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் ஜெயக்குமார் யு.என்.டி.பி நிறுவனத்தின் பிராந்திய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் பொறுப்பதிகாரி முருகதாஸ் ஹலோறஸ்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் டொம் கிராம அலுவலர் சுதர்சன் பிரதேச இராணுவ பொறுப்பதிகாரி மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment