Monday, June 11, 2012

புலிகள் இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலேயே யுத்தம் நடைபெற்றது: தமிழ் மக்களுடன் நாம் யுத்தம் செய்யவில்லை - மஹிந்த ஹத்துருசிங்க!

Monday, June, 11, 2012
இலங்கை::புலிகள் இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலேயே யுத்தம் நடைபெற்றது. தமிழ் மக்களுடன் நாம் யுத்தம் செய்யவில்லை. தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எவ்வித பகையும் கிடையாது என்று யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

வட மாகாண மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் தற்போது சுமூகமான உறவு காணப்படுகிறது. அவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் இராணுவ முகாம்களுக்கு வந்து முறைப்பாடு செய்கின்றார்கள். அதுபோலவே நாமும் அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கின்றோம் என்றும் அவர் சொன்னார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, நாமும் சமூகத்தில் ஒரு பிரிவினரேயாவோம். மக்களுக்கான பாதுகாப்பை வழங்குவது எமது கடமை. மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் எவ்வித தயக்கமும் அச்சமும் இன்றி எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். பிரச்சினைக்குரியவர்கள் யாராக இருந்தாலும் குறிப்பாக இராணுவமாக இருந்தாலும் கூட அதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்று தசாப்த காலம் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் இன்று மக்களோடு மக்களாக அவர்களுடைய ஜீவனோபாயத்தைக் கட்டியெழுப்பும் வகையிலான பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் இராணுவத்திற்கும் இராணுவம் மக்களுக்கும் பல்வேறு வகையிலான ஒத்துழைப்புக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் இராணுவத் தினரை அச்சத்துடனும் சந்தேகக் கண்கொண்டும் பார்த்த மக்கள் இன்று எவ்வித அச்சமுமின்றி இயல்பாக நெருங்கிப் பழகும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் இராணுவத்துடன் சிங்களத்திலும் இராணுவத்தினர் மக்களுடன் தமிழிலும் பேசுகின்றனர்.

வடக்கில் இருக்கின்ற இராணுவத்தினரால் சிவில் நிர்வாகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது அரசியல் சுய இலாபத்திற்காக சில அரசியல் வாதிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூறுகின்ற குற்றச்சாட்டுகளாகும். வடக்கில் இராணுவம் இருப்பதே மக்களின் பாதுகாப்பிற்கு சிறந்தது என மக்களும் பல மதத் தலைவர்களும் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இராணுவ குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வடக்கில் குற்றச்செயல்கள்அதிகரித்துள்ளன. இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் இராணுவம் தற்போது அதிகமாக ஈடுபடுத்தப்படுவதில்லை. அத்தோடு சோதனைச் சாவடிகள் இல்லை. இது குற்றச் செயல்களைப் புரிகின்றவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

வடக்கில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள். அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அங்கு இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்பது தான் முக்கிய விடயம். அந்த வகையில் பொது மக்களுக்கு சிறந்த பாதுகாப்பினையும் பல்வேறு சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment