Thursday, June 21, 2012

பொலிஸாருக்கு எதிராக அதிகளவிலான முறைப்பாடுகள்!

Thursday, June, 21, 2012
இலங்கை::வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துன்புறுத்தல்கள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் என்பன குறித்து 168 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கடந்த வருடத்தில் இதுபோன்ற 347 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிடுகின்றார்.

சமூகத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்ற சம்பவங்களில் மிகக் குறைந்த வீதமான முறைப்பாடுகளே பதிவானதாக அவர் கூறினார்.

முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பொலிஸாருக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

ஏதேனும் குற்றச்செயல் அல்லது முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்கையில், அதற்கான சாட்சியங்களைக் கண்டறியும் வழிமுறைகள் காரணமாக பொலிஸார் மீது கூடுதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹனவிடம் தொடர்புகொண்டு வினவியபோது, விசாரணைகளின் போது எந்த வகையிலும் துன்புறுத்தல்களில் ஈடுபடக் கூடாது என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் ஒருவரை கைதுசெய்ய முற்படும் போது சம்பந்தப்பட்ட நபர் எதிர்ப்பு நடவடிக்கைகளை கையாள முற்படுவாராயின், அதற்கெதிராக பொலிஸார் ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அத்துடன் சட்டவிரோதமான கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தி வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தல் மற்றும் மக்கள் உடைமைகளுக்கு அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவற்றை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களின் அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்திருக்குமாயின், அவற்றைத் துன்புறுத்தலாக எவரும் கருதிவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment