Thursday, June 28, 2012

பெருந்துறை அருகே இன்று அதிகாலை சென்னை ரயிலில் பயங்கர தீ!

Thursday, June 28, 2012
ஈரோடு::சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், பெருந்துறை அருகே இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கார்டு மற்றும் சரக்கு பெட்டிகள் எரிந்து நாசமாயின. உடனடியாக ரயிலை நிறுத்தி மற்ற பெட்டிகள் கழற்றி விடப்பட்டதால் 1400 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் எரிந்து சாம்பலாயின. சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16041), சென்ட்ரலில் இருந்து நேற்றிரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. ரயிலில் 1400 பயணிகள் இருந்தனர். இந்த ரயில், இன்று காலை 10.45 மணிக்கு ஆலப்புழா சென்றடைய வேண்டும். மொத்தம் 22 பெட்டிகள் கொண்ட ரயிலில், கடைசி பெட்டியின் ஒரு பகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் கார்டுகளுக்கும் மற்றொரு பகுதி பார்சல்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தொட்டிபாளையம் ஸ்டேஷனை ரயில் கடந்து சென்றது. அப்போது கடைசி பெட்டியின் பார்சல் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. ஸ்டேஷனில் நின்றிருந்த கண்காணிப்பாளர் ராஜகோபால், இதை பார்த்து உடனடியாக இன்ஜின் டிரைவர் கோபாலுக்கு வயர்லெஸ் மூலம் தெரிவித்தார். கார்டுகளுக்கும் தகவல் பறந்தது. உடனே ரயில் நிறுத்தப்பட்டது. டிரைவர் கோபால், உதவி டிரைவர் விஷ்ணு மற்றும் கார்டுகள் ஓடிவந்து பயணிகளை உஷார்படுத்தினர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள், அவசரம் அவசரமாக கீழே இறங்கினர். தீப்பிடித்த பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. மற்ற பெட்டிகள் சற்று தூரம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.

கடைசி பெட்டி முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் கிடைத்து பெருந்துறை, ஈரோடு, பவானியில் இருந்து 5 வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். பார்சல் பகுதியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
ஸ்டேஷன் கண்காணிப்பாளர் சரியான நேரத்தில் தீயை பார்த்து தகவல் தெரிவித்ததால், ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சேலம் கோட்ட மேலாளர் சுஜாதா சம்பவ இடத்தை பார்வையிட்டார். ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். சேலம் கோட்ட மேலாளர் சுஜாதா கூறுகையில், ‘‘தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள், கேஸ் அடுப்பு உதிரிபாகங்கள், புத்தகங்கள், மீன் பார்சல்கள் இருந்தன. இவை அனைத்தும் எரிந்துவிட்டன. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சேதமதிப்பு குறித்து ஆய்வுக்கு பிறகுதான் தெரியவரும்‘‘ என்றார். ரயில்கள் தாமதம் இந்த விபத்து காரணமாக ஈரோடு - கோவை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு வரவேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ், 5.20&க்கு வரவேண்டிய பெங்களூர் & கன்னியாகுமரி ஐலேண்ட் எக்ஸ்பிரஸ், 6.25-க்கு வரவேண்டிய மும்பை & கோவை குர்லா எக்ஸ்பிரஸ், 7.30க்கு வரவேண்டிய நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், திருச்சி பாசஞ்சர் ஆகியவை 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தன. எதிர் டிராக்கில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment