Sunday, June, 10, 2012புதுக்கோட்டை::புதுக்கோட்டை தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன், கடந்த ஏப்ரல் 1ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து காலியான இந்த தொகுதிக்கு ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி துவங்கி 25ம் தேதி நிறைவடைந்தது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகிர் உசேன் உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர். திமுக, இந்திய கம்யூ. பாமக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் போட்டியிடவில்லை. தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அதிமுக, தேமுதிக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களாக தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. அவர்களுடன் எம்.பி., எம்எல்ஏக்கள் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அதிமுகவுக்கு ஆதரவாக சமக தலைவர் சரத்குமார், லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்தனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் தொகுதி முழுவதும் 3 நாள் பிரசாரம் மேற்கொண்டார். அவரது மனைவி பிரேமலதாவும் ஜாகிர் உசேனுக்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமானை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார். அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகளும் வேட்பாளர்களும் கடைசிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன், இன்று காலை அம்மையப்பபட்டி, தொண்டமான் நகர், கொட்டகைக்கார தெரு ஆகிய இடங்களில் வாக்குகள் சேகரித்தார். சின்னப்பா பூங்காவில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் தேமுதிக தேர்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் மற்றும் அமைச்சர்கள் பழைய பஸ் நிலையம் அருகிலும் ஐஜேகே வேட்பாளர் சீனிவாசன் டிவிஎஸ் கார்னரிலும் பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர். வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் கொடுக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இவை நாளை காலை பலத்த பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இரவு 8 மணிக்குள் அனுப்பி வைக்கப்படும். நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். வாக்குப்பதிவையொட்டி தொகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் துணை ராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment