Sunday 3rd of June 2012சென்னை::திமுக தலைவர் கருணாநிதி, தனது 89&வது பிறந்தநாளையொட்டி பெரியார், அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், கவர்னர் ரோசய்யா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 89&வது பிறந்தநாள். இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்டார். துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்பி, டி.ஆர்.பாலு, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், கு.க.செல்வம் மற்றும் திமுகவினர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற கருணாநிதி, பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் பிறந்தநாள் கேக் வெட்டினார். மனைவி தயாளு அம்மாள், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வம், செல்வி, சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர்.
காலை 7.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, பிறந்தநாள் செய்தியாக என்ன சொல்கிறீர்கள் என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘நான் பிறந்ததே செய்திதான்’’ என்றார். அதைத் தொடர்ந்து 7.45 மணிக்கு பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அங்கு அவரை தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.
இதன்பிறகு கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுவை முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், நெப்போலியன், காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப.தங்கவேலன், ரகுபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னர் ரோசய்யா, ஒடிசா முன்னாள் கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன் ஆகியோர் கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். பெங்களூரில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதிக்கு மேள, தாளம் முழங்க பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைஞர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்தபடி தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்று மாலை கே.கே.நகரில் நடக்கும் பிரமாண்டமான பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.
அறிவாலயத்தில் மாணவரணி சார்பில் ரத்ததானம் முகாம் நடந்தது. மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர். மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.
No comments:
Post a Comment