Thursday, June, 21, 2012இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது என்றும் இதனால் கைதிகளில் எழுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை உயரதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்டு வருவதாகவும் காயமடைந்த கைதிகளுக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் சிறையதிகாரிகள் மேலும் கூறினர்...
வவுனியா சிறையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 7 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்க சந்தேகநபர்கள் அடங்கிய இரு குழுக்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்தோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment