Thursday, June 21, 2012

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கம்யூனிஸ்ட்கள் முடிவு:பிரணாப் முகர்ஜிக்கு 52%, சங்மாவுக்கு 33% ஓட்டுக்கள்... எப்படி ஜெயிப்பார் சங்மா??

Thursday, June, 21, 2012
புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடது சாரி கட்சிகள் இன்று முடிவு செய்கின்றன. இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை புறக்கணிக்க இடதுசாரிகள் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் வெளியாகியுள்ளது. இதுஒருபுறமிருக்க, சங்மாவை ஆதரிப்பது குறித்து இன்று பா.ஜ. கூட்டணி முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஐ.மு. கூட்டணியில் உள்ள திரிணாமுல் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. இதுதவிர சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. பா.ஜ. கூட்டணியில் உள்ள சிவசேனாவும் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மொத்தம் 24 கட்சிகள் பிரணாப்புக்கு ஆதரவளித்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரணாப்புக்கு போட்டியாக முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா களத்தில் இறங்கியுள்ளார்.

அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். போட்டியை உறுதி செய்யும் வகையில் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகுவதாக சங்மா நேற்று அறிவித்தார். இதற்கான கடிதத்தை உடனடியாக சரத்பவாருக்கு அனுப்பினார். அதனை ஏற்றுக் கொள்வதாக பவாரும் அறிவித்துள்ளார். சங்மாவை தொடர்ந்து அவரது மகளும், மத்திய அமைச்சருமான அகதா சங்மாவும், அமைச்சர் பொறுப்பு மற்றும் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி இன்று முடிவு எடுக்கிறது. இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய 4 இடதுசாரி கட்சிகள் இன்று பிற்பகல் டெல்லியில் கூடி ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறது. இதில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. தேர்தலை புறக்கணிக்கும் யோசனையும் இடதுசாரிகள் வசம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இடதுசாரிகள் நிலை குறித்து இன்று மாலைக்குள் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது...

பிரணாப் முகர்ஜிக்கு 52%, சங்மாவுக்கு 33% ஓட்டுக்கள்... எப்படி ஜெயிப்பார் சங்மா??

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதுள்ள லேட்டஸ் நிலவரப்படி பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கும் மேலான ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன. அதேசமயம், பி.ஏ.சங்மாவுக்கு 33 சதவீத அளவிலான வாக்குகளே சேகரமாகியுள்ளன. இதனால் சங்மா எப்படி வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே ஏதோ ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றன. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், அதிமுக, பிஜூ ஜனதாதளம், பாஜக, சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற பி.ஏ.சங்மாவும் களத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை ஒவ்வொருவராக அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

சங்கமாவைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக, பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவுதான் உறுதியாகியுள்ளது.

இதை வைத்துக் கணக்குப் போட்டால் தற்போது பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் சேகரமாகியுள்ளன. இடதுசாரிகள் ஒருவேளை அவரை ஆதரிப்பதாக அறிவித்தால் இந்த அளவானது 57 சதவீதமாக உயரும்.

அதேசமயம், சங்மாவுக்கு தற்போது கிட்டத்தட்ட 33 சதவீத அளவுக்குத்தான் வாக்குகள் உள்ளன. மமதா மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை வாங்கினாலும் கூட 40 சதவீதத்தை அவரால் தாண்ட முடியாது என்றே தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியிடம் மட்டும் தனியாக 30 சதவீத வாக்குகள் உள்ளன. பாஜகவின் வாக்கு பலமானது 21 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment