Sunday, June 10, 2012

ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கியும் போதாது என்பது சரியானதல்ல : நாராயணசாமி!

Sunday, June, 10, 2012
மீனம்பாக்கம்::மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அடுத்த ஓரிரு தினங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அதற்குள் ஐ.மு.கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிரமாக இருக்கிறார். அதுபற்றி கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

மத்திய அமைச்சர் சிதம்பரம், பதவி விலக வேண்டும் என்று பா.ஜ. தலைவர் நிதின் கட்கரி உள்பட சில தலைவர்கள் கூறுவது சரியானது அல்ல. 2009 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிரான 111 தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல்தான் சிதம்பரத்தின் மீதான வழக்கும் உள்ளது. மதுரை ஐகோர்ட், இவர் மீதுள்ள வழக்கை விசாரிக்கலாம் என்றுதான் தீர்ப்பு வழங்கியுள்ளதே தவிர, சிதம்பரம், குற்றவாளி என்று தீர்ப்பு எதுவும் வழங்கவில்லை.

மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது தவறானது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ரூ.20 ஆயிரம் கோடிதான் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கியது. தற்போது ரூ.28 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் நடக்கும் மத்திய அரசின் திட்டப் பணிகளுக்காக ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கியும் போதாது என்று கூறுவது சரியல்ல. இவர்கள் மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு போன்றவை இலவசமாக வழங்குகிறேன் என்று கூறி அதற்கான செலவையும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment