Wednesday,June,13,2012பெங்களூர்::நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இன்று 2வது நாளாக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் தங்க தட்டுகள், சூலம் மற்றும் வெள்ளி குடங்கள் சிக்கின. ஆசிரமத்தின் அறைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள், நடிகைகளின் கவர்ச்சி படங்கள், ஆபாச புத்தகங்களை பார்த்து போலீசாரும் அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் இருக்கும் நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த வாரம் கன்னட அமைப்பினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் சீடர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நித்யானந்தாவை பெங்களூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கர்நாடக மாநிலம் முழுவதும் நித்யானந்தாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நித்யானந்தா படங்களை தீயிட்டு கொளுத்தினர். பிடதி ஆசிரமத்தை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிளம்பியது.
இந்நிலையில், பிடதி ஆசிரமம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உத்தரவிட்டார். அதன்படி பிடதி ஆசிரமம் அமைந்துள்ள ராம்நகர் மாவட்ட கலெக்டர் தீவிர விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆசிரமத்தில் சோதனை நடத்தவும் நித்யானந்தாவை கைது செய்யவும், ஆசிரமத்துக்கு சீல் வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கையால் நித்யானந்தாவும் அவரது சீடர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரமத்தில் இருந்த ஆண், பெண் சீடர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நேற்று வெளியேற தொடங்கினர். அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்து அனுப்பினர். ஆசிரமத்தை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆசிரமத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி நகைகள், பொருட்களுடன் சீடர்கள் தப்பிச் செல்வதாகவும், அவர்களை தடுத்து சோதனை நடத்த வேண்டும் என்றும் கன்னட அமைப்பினர் ஆசிரமத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரமத்தில் அதிகாரிகளும் போலீசாரும் நேற்று தீவிர சோதனை நடத்தினர். ராம்நகர் மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வால், துணை கமிஷனர் ஸ்ரீராம்ரெட்டி, துணை மண்டல கமிஷனர் சினேகா, பிடதி தாசில்தார் ரவி ஆகியோர் தலைமையில் இன்று 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது. வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், இந்து சமய அறநிலைய துறைகளை சேர்ந்த 10க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 50க்கும் அதிகமான போலீசார் சென்றுள்ளனர்.
ஆசிரமத்தில் ராஜ்ஜிய சபா, ஆனந்த சபா, தியான சபா என தனித்தனியாக மூன்று கட்டிடங்கள் உள்ளன. அதில் ஏராளமான அறைகள் இருக்கிறது. ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தினர். இதுதவிர நித்யா குடிர் என்ற கட்டிடத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது விலை உயர்ந்த வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்த சூலம், வெள்ளி குடம், தங்கத்தாமரை தட்டு, தங்க முலாம் பூசப்பட்ட வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஆசிரம வளாகத்தில் உள்ள இன்னொரு கட்டிடத்துக்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஒரு அறையில் கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு அறையில் தமிழ், கன்னட, ஆந்திர முன்னணி நடிகைகளின் கவர்ச்சி படங்களும், ஆபாச ஆங்கில இதழ்களும் மலைபோல குவிந்து கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சேகரித்து மூட்டை கட்டினர்.
ஒருபக்கம் பரபரப்பாக சோதனை நடந்து கொண்டிருந்தபோது, ஆசிரமத்தின் இன்னொரு பக்கத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் வழக்கமான பூஜை, பஜனையில் மூழ்கி இருந்தனர்.
காலியாக கிடந்த லாக்கர்கள்
ஆசிரமத்தில் நடத்தப்படும் சோதனைகளை போலீசாரும் அதிகாரிகளும் வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு அறையில் இருந்த 6 லாக்கர்கள் திறந்து கிடந்தன. அவற்றில் விலை உயர்ந்த பொருட்கள் அல்லது முக்கிய ஆவணங்கள் இருந்திருக்கலாம் என்றும் அவற்றை ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய நித்தி சீடர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
தனிப்படை விசாரணை
ஆசிரமத்தில் இருந்து கஞ்சா, ஆணுறை, ஆபாச சிடிகள், ஆபாச படங்கள், நடிகைகளின் கவர்ச்சி படங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இவை எப்படி ஆசிரமத்துக்குள் வந்தன என்று விசாரிப்பதற்காக பிடதி டிஎஸ்பி ராதாகிருஷ்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் ஆசிரமத்துக்குள் இருக்கும் சீடர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
4 கன்டெய்னர் மர்மம்
நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் போலீஸ் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர். சோதனையின்போது நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கர்நாடக போலீஸ் தரப்பில் தெரிய வந்த சில தகவல்கள்:
* சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகைகள் இருவர் ஆசிரமத்துக்கு வந்து தங்கியிருந்துவிட்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் முக்கியமான ஆவணங்கள், பொருட்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. அந்த நடிகைகளுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாகவும் நித்யானந்தாவுக்கு அவர்கள் மிகவும் உதவிகரமாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
* ஆசிரமத்தில் 4 பெரிய கன்டெய்னர்கள் இருப்பதாகவும் அந்த கன்டெய்னர்களை திறக்க சிறப்பு அனுமதிக்காக போலீசார் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கன்டெய்னர்கள் திறக்கப்பட்டால் பல மர்மங்கள் வெளிவரும் என தெரிகிறது.
* நித்யானந்தா தற்போது தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக ரகசிய தேடுதல் வேட்டையில் கர்நாடக போலீசார் தீவிரமாகியுள்ளனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதோடு, பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தந்து தங்க வைத்திருப்பதாக தமிழகத்தை சேர்ந்த சிலர் மீது கர்நாடக போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆசிரம விசுவாசியாக இருந்த முக்கிய தமிழக புள்ளிகள் சிலர் பற்றி கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
* நித்யானந்தா மீதான கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவின் நடவடிக்கை பற்றி விமர்சனம் செய்யும்விதமாக தமிழகத்தில் செய்தி பரப்புபவர்கள் பற்றியும் கர்நாடக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ‘ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு விவகாரம் முற்றிப் போன நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசு நிர்வாகம் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? சதானந்த கவுடாவின் நடவடிக்கைக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அதற்கு உரிய பதிலடி தரப்படும்’ என்று கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.
விரைவில் சிக்குவார்
பிடதி ஆசிரமத்தில் 2வது நாளாக நடக்கும் சோதனை குறித்து துணை கமிஷனர் ஸ்ரீராம் ரெட்டி கூறுகையில், ‘‘சோதனை தொடர்ந்து நடக்கிறது. ஓரிரு நாளில் நித்யானந்தாவை கைது செய்துவிடுவோம். சோதனை முழுமையாக முடிந்த பிறகு ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும். அப்போது ஆசிரமத்துக்குள் இருக்கும் சீடர்கள் வெளியேற்றப்படுவர்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment