Tuesday, June 26, 2012

ஜனாதிபதி தேர்தலில் போட்டி : பிரணாப் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல்

Tuesday, June 26, 2012
புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தான் வகித்து வரும் மத்திய நிதியமைச்சர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்கிறார். மனு தாக்கல் செய்த பிறகு, 30ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவி காலம் முடிவடைய உள்ளது. இந்தியாவின் 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் இதற்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 76 வயதான மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் சங்மா நிறுத்தப்பட்டு உள்ளார். இவரை அதிமுக, பிஜு ஜனதா தளம், அகாலி தளம் போன்ற கட்சிகள் ஆதரிக்கின்றன. இந்நிலையில் போட்டியின்றி ஒருமனதாக ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும், பிரணாப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறிவருகிறது. இதற்கு பலனில்லாததால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நீண்ட கால அரசியல்வாதியான பிரணாப், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், நிதியமைச்சர் பதவியில் இருந்தும் இன்று விலகுகிறார். இதையொட்டி அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கிய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர், மத்திய அமைச்சரவையில் பிரணாப் இல்லாதது உணரப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் மகத்தான வெற்றி பெறுவார் என்று வாழ்த்தினார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பிரணாப் பேசினார். கூட்டம் முடிந்ததும் அனைவரிடமும் கைகுலுக்கி பிரணாப் விடை பெற்றார். அப்போது அவர் மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார். வரும் 28ம் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை பிரணாப் தாக்கல் செய்கிறார். வேட்பு மனுவை 50 பேர் முன்மொழிய வேண்டும். 50 பேர் வழிமொழிய வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதி, மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பிரணாப் வேட்பு மனுவை முன்மொழிந்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சி தலைவர்களை பிரணாப் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இதன் ஒரு கட்டமாக 30ம் தேதி சென்னை வருகிறார். அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோருகிறார். அப்போது அவருக்கு திமுக சார்பில் விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment