Wednesday, May 23, 2012

தமிழ் அரசியல் கைதிகள் பல நாட்களாக உண்ணாவிரதம் - பாராளுமன்றத்தில் சம்பந்தன்!

Wednesday,May, 23, 2012
இலங்கை::தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு உடனடியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதும், ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கைவிடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் விசேட உரையாற்றியபோதே இந்தக் கருத்தினை முன்வைத்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும், வவுனியா மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த பல நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சபையில் உரையாற்றிய இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் கைதிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், பொறுப்புக்கூறத்தக்க வாக்குறுதிகளை வழங்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இதேவேளை இந்தப் பிரச்சினை மூன்று அமைச்சுக்களுடன் தொடர்புபட்ட விடயமாகையால், அதற்கான அரசாங்கத்தின் பதிலை நாளைய தினம் சபையில் தெரிவிக்க முடியும் என்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment