Thursday, May 31, 2012

எதிர்க்கட்சிகள் பந்த்: பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை!

Thursday,May,31,2012
சென்னை::எதிர்க்கட்சிகள் பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன .இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளார். பெட்ரோல்​ டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து பஸ் டெப்போக்கள், பஸ் நிலையங்களில் நள்ளிரவு முதலே போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பஸ்களை இயக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:​ 'பந்த்' என்ற பெயரில் வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் அடைக்கச் சொல்லி வற்புறுத்தினாலோ, பஸ்களை மறித்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பந்த் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோரது மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ்நிலையம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடந்தது.

No comments:

Post a Comment