Saturday, May, 19, 2012சென்னை::காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காவிரி நதி நீர் ஆணையம் கடைசியாக 2003 பிப்ரவரி 10,ம் தேதி கூடியது. அதன் பிறகு இதன் கூட்டம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 17,ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தேன். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை சரியாக அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தேன். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்புக்கு பிறகே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவது குறித்து பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றத்தின் 5.2.2007 தேதியிட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலோ ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான
மாதங்களில் மாதந்தோறும் தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு மறுத்து வருவதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
மேலும் கர்நாடக அரசு நீதிக்கு புறம்பாக பிப்ரவரி முதல் மே மாதங்களில் கோடை பாசனத்துக்காக காவிரி நீரை பயன்படுத்தி வருகிறது. இதனால் 4 அணைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள காவிரி நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள 4 பெரிய அணைகளிலும் கடந்த பிப்ரவரி 1,ம் தேதி மொத்தம் 58.5 டிஎம்சி நீர் இருந்தது. கடந்த 14,ம் தேதி இது 28.176 டிஎம்சியாக குறைந்துவிட்டது. பிப்ரவரி 1 முதல் மே 14 வரை 30.33 டிஎம்சி நீரை கர்நாடக அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதுதவிர இந்த அணைகளுக்கு வந்த 11 டிஎம்சி நீரையும் சேர்த்து மொத்தமாக 41 டிஎம்சி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நீர்இருப்பு குறைந்ததால், பருவ மழையினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தை கொண்டு அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தவே கர்நாடக அரசு முயற்சிக்கும். அதன் பிறகே உபரியாக இருக்கும் நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும். இதனால் மேட்டூர் அணையின் நீர் வரத்து பாதிக்கும். குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதுடன், சம்பா சாகுபடி தொடங்குவதில் கால தாமதம் ஏற்படும். மத்திய நீர் கமிஷன் உருவாக்கியுள்ள இடர் பகிர்வு பார்முலா
எந்த தீர்வையும் அளிக்கவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படியோ அல்லது நீர் ஆணையத்தின் பார்முலா அடிப்படையிலோ கர்நாடகம் தர வேண்டிய தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க இடர் ஏற்படும் நேரத்தில் இந்த பார்முலாவை காவிரி நதிநீர் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்புவது என காவிரி கண்காணிப்பு கமிட்டி தனது 24,வது கூட்டத்தில் முடிவு செய்தது. இத்தகைய இடர் சூழ்நிலை எந்த நேரத்திலும் வரலாம். நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரி நதி நீர் பாசன ஏரியாவை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கக் கூடாது. ஆனால் கர்நாடக அரசு ஆண்டுவாரியான காவிரி நீர் பாசன ஏரியா விவரங்களை அளிக்கவில்லை. இதுவும் காவிரி நதி ஆணையம் உடனடியாக பரிசீலிக்க வேண்டிய மற்றொரு பிரச்னையாக உள்ளது. எனவே, இந்த பிரச்னைகள் குறித்து முடிவு எடுக்க காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment