Wednesday, May 23, 2012

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கின: சட்டசபை செயலாளர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை!

Wednesday,May, 23, 2012
புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபா செயலாளர் மற்றும் சட்டசபை செயலாளர்களுடன் தேர்தல் கமிஷனர் குரேஷி ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதி அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலுக்கான அட்டவணை ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் அதிகாரியாக செயல்படவிருக்கும் ராஜ்யசபா செகரட்டரி ஜெனரல் வி.கே.அக்னி ஹோத்ரி, மாநில சட்டசபை செயலர்கள் உள்பட 50க்கும் அதிகமான அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டவிதிகளை அதிகாரிகளுக்கு விளக்கினர். மாநிலங்களில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகளை தயாரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் உள்ளது. அது தொடர்பாக வரும் 30ம் தேதி அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்துகிறது. ஜூலை 16ல் இருந்து 19ம் தேதிக்குள் தேர்தலை நடத்த கமிஷன் முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜ. தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், பஞ்சாப் முதல்வர் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக அவர்களிடம் போனிலும் பேசினார். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை நேற்று முன்தினம் சங்மா சந்தித்து ஆதரவு கேட்டார். இதுதொடர்பாக இடதுசாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க தயார் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பாக பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க மன்மோகன்சிங் மற்றும் சோனியா நேற்று மறுத்துவிட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சபாநாயகர் மீராகுமாரே ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பிரணாப் முகர்ஜியை அவர் ஆதரிப்பாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவிக்கும் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க தயார் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment