Thursday, May 31, 2012

ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்

Thursday,May,31,2012
புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா? என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தற்போது வகிக்கும் பதவியில் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று பதில் அளித்தார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என யூகங்கள் வெளியாயின. இதுகுறித்து அடுத்த மாதம் 4ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. முன்னாள் சபாநாயகரும்,

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. மியான்மரிலிருந்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது இருக்கும் பதவியில் தாம் சந்தோஷமாக இருப்பதாக மன்மோகன் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment