Sunday, May 20, 2012

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்!

Sunday, May, 20, 2012
இலங்கை::பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கக் கூடிய வகையில் புதிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை முடக்கி அரசுடமையாக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நபர் ஒருவர் அல்லது நிறுவனமொன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டிருப்பதாக தகுதிவாய்ந்த அதிகாரி தீர்மானித்தால் அந்த நபர் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்.

1968ம் மற்றும் 2001ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் தகுதி வாய்ந்த அதிகாரி அரச வர்த்தமானியில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சினால் தகுதி வாய்ந்த அதிகாரி நியமனம் மேற்கொள்ளப்படும்.

தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டதன் பின்னர், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களின் சொத்துக்களை முடக்கும் பூரண அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் அடிப்படைத் தேவைகளுக்கான கொடுப்பனவுகளை செலுத்த அனுமதி அளிக்கும் அதிகாரமும் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு வழங்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையில் வசித்தால் நேரடியாக தகவல் அனுப்பி வைக்கப்படும் எனவும், வெளிநாட்டில் வசித்தால் உரிய நாட்டு அரசாங்கத்தின் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment