Tuesday, May, 22, 2012புதுடெல்லி::கருப்பு பணம் குறித்து மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்த கருப்பு பணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் ரூ.23 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்திருந்தனர். அது இப்போது, ரூ.9,300 கோடியாக குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 97 பக்கங்களை கொண்ட வெள்ளை அறிக்கையை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருப்பு பணத்தை கட்டுப்படுத்த லோக்பால் மசோதா, குறைதீர்வு மசோதா, நீதியியல் பொறுப்புணர்வு மசோதா, ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதா, பொது கொள்முதல் மசோதா ஆகிய 5 மசோதாகளை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. கருப்பு பணத்தை ஒழிக்க லோக்பால், லோக் அயுக்தா உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட தொடங்க வேண்டும். மேலும், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் அளிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கடந்த 2006ம் ஆண்டு நிலவரப்படி இந்தியர்கள் ரூ.23 ஆயிரத்து 373 கோடி கருப்பு பணத்தை போட்டு வைத்திருந்தனர். அது 2010ல் ரூ.9,295 கோடியாக குறைந்துள்ளது.
வெளிநாடுகளுடன் இணைந்து அவர்களது உளவு தகவலை பெற வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் துறைகளில் இருந்து கருப்பு பணம் அதிக அளவில் வருகிறது. அதை தடுக்க அந்த துறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் பணம் கொடுக்கல் வாங்கல் மின்னணு முறையில் நடக்க வேண்டும். மேலும், பத்திர பதிவின் போதே வரிபிடித்தம் செய்ய வேண்டும். தங்கம் இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து கடத்தல் அடியோடு குறைந்தது. அதுபோல் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதும் கருப்பு பணம் உருவாவது குறைந்துவிடும்.
நகை கடைகளில் பணம் கொடுத்து நகைகள் வாங்குவது கருப்பு பணத்தை ஊக்குவிக்கிறது. எனவே, கிரெடிட், டெபிட் கார்டுகளை நகை கடைகளில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். பண மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்ச தண்டனை என்ன என்பது மட்டுமே சட்டத்தில் உள்ளது. குறைந்தபட்ச தண்டனை என்ன என்பதையும் வரையறுக்க வேண்டும். இப்படி செய்வதால் மோசடிகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைந்துவிடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எப்படி குறைந்தது: சொல்ல தயக்கம் ஏன்?
பா.ஜ கருத்து: இந்த வெள்ளை அறிக்கை குறித்து பா.ஜ மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,''அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை முக்கியமான விஷயங்களை மறைக்கிறது. எவ்வளவு கருப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு தெரிவிக்கவில்லை. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த ரூ.23 ஆயிரம் கோடி கருப்பு பணம் ரூ.9,300 கோடியாக குறைந்துள்ளது. அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்ற விவரம் அறிக்கையில் இல்லை. மேலும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதை சொல்ல தயக்கம் ஏன்'' என்றார்.
No comments:
Post a Comment