Saturday, April 21, 2012

யுத்த காலத்தில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அவர்களின் உறவினர்கள் UN அகதி முகவர் நிறுவனத்திடம் கோரிக்கை!

Saturday, April, 21, 2012
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அவர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல தமிழர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய பலர் பற்றிய எவ்வித தரவுகளும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் மோசமான சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களிடம் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக 25000 முதல் 50000 அமெரிக்க டொலர்கள் வரையில் ஆட்கடத்தல்காரர்கள் அறவிட்டுள்ளனர்.

இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இலங்கையர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவ்வாறான பயணங்களின் போது பல இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் சிலர் குறித்த நாடுகளின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் படகு மூலம் அவுஸ்திரேலிய நோக்கிப் புறப்பட்டுச் சென்ற தனது கணவரான ஜயவீரசிங்கம் சிவகுரு என்பவர் பற்றிய எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என அவரது மனைவி கோகிலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழினி என்பவர் தனது சகோதரனைக் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

வீடுகளையும் நகைகளையும் அடகு வைத்து இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்றனர்.

இதேவேளை, காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க இன்டர்போலின் உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment