

இலங்கை::இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லை தாண்டியதுமான மீன்பிடியால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகளை இந்திய அரசுக்கு உணர்த்தும் முகமாக விரைவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கிளன் தொழில் நடவடிக்கைகளால் கடல்வளம் அழிக்கப்படுவதுடன் அதை நம்பி வாழும் மக்களது வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது.
இது விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் ஏற்கனவே பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த போதிலும் எதுவிதமான உறுதியான முடிவுகளும் எட்டப்படாத சூழலிலேயே கச்சதீவில் எனது ஏற்பாட்டில் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது இந்திய மீனவர்கள் தமது பிழையை ஏற்றுக் கொண்ட போதிலும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயத்தை இந்தியத் தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் 1000 படகுகளில் 5000 கடற்றொழிலாளர்களை ஒன்றிணைத்து வடமராட்சி மன்னார் முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து கடற்தொழிலாளர்களுடன் இராமேஸ்வரத்தை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அதேவேளை வடமாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமை எமக்குரியது என்பதால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்கு இருதரப்பு மீனவர்களும் கலந்துரையாடுவது மட்டுமன்றி இந்திய மத்திய அரசுடனும் இலங்கை அரச தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியதும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
பாதிக்கப்படும் வடபகுதி மீனவர்கள் தொடர்பில் த.தே.கூட்டமைப்பு மௌனம் சாதித்து வருகின்றமையானது வேதனைக்குரிய விடயமென அமைச்சர் சுட்டிக் காட்டினர்.
அத்துடன் கடந்த ஓராண்டு காலமாக த.தே.கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் நம்பிக்கையீனத்துடன் கலந்து கொள்வதனாலேயே திடமான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
இதேபோன்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை மறுத்து வந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி வருகின்றனர். இங்கு உண்மை என்னவெனில் ஈ.பி.டி.பி.யினராகிய நாம் நீண்டகாலமாக கூறி வந்ததையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.
எமது மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தெரிவிக் குழு மூலமே நிரந்தரத் தீர்வைக் காண முடியும் எனவும் எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க முன்வர வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை ஈ.பி.டி.பி. பற்றி குறிப்பிடப்பட்டுள்ள தவறான குற்றச்சாட்டை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் எனவும் இது விடயம் தொடர்பில் நாம் நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கின்றோம் எனவும் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் பொலிஸார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரைக்கு அமைய மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையத்திலும் மக்களது முறைப்பாடுகளை தமிழில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் இவ்வாறு இல்லாது சிங்கள மொழியில் பதிவு செய்தால் தமது கவனத்திற்கு கொண்டு வருமாறும் தெரிவித்தார்.
பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் அவர்களது இடையூறுகள் எதுவுமே இல்லாததால் தாம் சுதந்திரமாக செயற்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முகமாக செயற்பட இயலுமாக உள்ளது என்தை தெரிவித்த அவர் யாழ் மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற குற்றச் செயல்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் விளக்கினார்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர் அவர்களும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் விளக்கமளித்தனர்.
இதேபோன்று சகோதரப் படுகொலைகளை நிறுத்துமாறு தான் பிரபாகரனிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் தன்னை துரோகிகள் பட்டியலில் முதல்வரிசையில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததுடன், நான் உயிருடன் இருக்கையில் தான் இறப்பேன் என பிரபாகரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எனவும் தெரிவித்தார்.
இதற்கு புலிகளின் முன்னாள் ஊடக பிரிவு பொறுப்பாளர் தயா மாஸ்டர் புன்னகைத்தபடி ஆமாம் என தலையசைத்தார். தொடர்ந்து புலிகள் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment