Wednesday,April,25,2012திருக்கோவிலூர்::மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான முயற்சியின் பலன் தான், கூடங்குளம் அனுமின் நிலையம் திறப்பதற்குக் காரணம் என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், நேற்று துவங்கிய மாவட்ட காங்., தலைவர் சிவராஜ் இல்ல திருமண விழாவில், எம்.எல்.ஏ., ஞானசேகரன், இளைஞர் காங்., தலைவர் யுவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, மணமக்கள் மதுசூதனன்- கணபதி ருச்சிரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் 40 நாட்களில் திறக்கப்படும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொடர் முயற்சி, காங்., கட்சியின் விழிப்புணர்வு பணிகள், மத்திய - மாநில அரசுகளின் இணக்கமான முயற்சியின் பலன் தான் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்குக் காரணம். இதன் மூலம், வரும் மாதங்களில் தமிழக மக்களுக்கு மின்வெட்டில் இருந்து விடுதலை கிடைக்கும்.
இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஓட்டளித்தது இந்தியா. அதன் பிறகு அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை முழுமை பெற வேண்டும், அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் தலைமையில், மத்திய அரசு கடந்த மாதம் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை, இலங்கைக்கு அனுப்பியது.
தமிழர்கள் இழந்த வீடு, நிலங்களை பெற்றுத் தர வேண்டும். சிங்களர்களுக்கு நிகரான உரிமையை பெற்று வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை, அங்குள்ள தமிழக மக்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு அனுப்பப்பட்ட குழுவின் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த பயணம், அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் என நம்புகிறோம்.
இலங்கை பிரச்னையை பொறுத்தவரை, மத்திய அரசு சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் இலங்கைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெறாதது வருந்தத்தக்கது. குழுவினர் ஆட்சியாளர்கள், அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து, தமிழர்களின் நிலை குறித்தும், வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளனர். இக்குழுவினர், விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில், பிரச்னைகளை முழுமையாக தீர்வு கண்டு, தமிழர்கள் வாழ்க்கை மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
சத்திஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க, மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. விரைவில் கலெக்டர் வீடு திரும்புவார் என நம்புகிறோம்.இவ்வாறு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
No comments:
Post a Comment