Monday, April 9, 2012

இந்திய அரசின் உதவி தமிழ் மக்களை சென்றடைகின்றமை தொடர்பில் ஆராயப்படும்-திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கே.எஸ்.இளங்கோவன்!

Monday, April, 09, 2012
சென்னை::இலங்கை தமிழ் மக்களுக்காக இந்திய அரசு முன்னெடுக்கும் உதவித் திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து ஆராயும் வகையில் இந்திய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்காக நாடாளுமன்றக் குழு இலங்கை வருகின்றது. அந்தக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக வருகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய ஏழு பேர் வேறு கட்சிகளில் இருந்து வருகை தருகின்றனர். இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இந்தக் குழுவிற்கு தலைவராக வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் திட்டங்கள் சென்றடைகின்றனவா என்பதைத் தெரிந்து கொள்ளவும், அவர்களுடைய பிரச்சினைகள், பாதுகாப்பு குறித்து ஆராய்வதும் எங்கள் விஜயத்தின் நோக்கமாகும் எனவும் ரி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

இந்திய இலங்கை அரசுகள் இலங்கை தமிழ் மக்களின் வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கச் செய்யவும், அது குறித்து பேசவும் செய்வோம். அது குறித்து இன்னும் முடிவாகவில்லை, இலங்கை வருவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment