Tuesday, April 24, 2012

தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும் - சம்பந்தன்!

Tuesday, April, 24, 2012
இலங்கை::தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதுடன் முஸ்லிம் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் எமது குறிக்கோளை அடைய முடியும். இதற்கான அழைப்பினை புல்மேட்டையில் விடுக்கின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா சம்பந்தன் புல்மோட்டை பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களைச் சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கான நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா எம்.ஏ.சுமத்திரன், திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கட்சியின் உப தலைவர் க.கோணேஸ்வரன் செயலாளர் கே.சிறிஸ்காந்தராசா மற்றும் கட்சிப் பிரமுகர்கள் மாவட்ட மக்களைச் சந்தித்து உரையாடும் நிகழ்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய சம்பந்தன், 1960 ஆம் ஆண்டு கால கட்டத்திற்கு முன்பிருந்தே தந்தை செல்வ நாயகம் அவர்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நாட்டில் சமாதானத்துடனும் கௌரவத்துடனும் வாழ முடியும் என வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய சூழலை நன்குணர்ந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலையே உள்ளது. இதனை தமிழ் முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் நாம் கௌரவமான பிரஜையாக வாழும் நிலையினை உருவாக்க ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment