Sunday, April 01, 2012தூத்துக்குடி::தூத்துக்குடி , இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 19 முதல் மீண்டு தொடங்கப்படும் என்று துறைமுகம் சேர்மன் சுப்பையா நிருபர்களிடம் இன்று கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் (2011,12) 281 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. சரக்குகள் கையாள்வதில் தற்போது 10 சதவிகிதம் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதுதவிர புதிய கப்பல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2012,13 நிதியாண்டில் 4 பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதாவது 8வது கப்பல் தளத்தை 2வது சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், 2, 3வது வடக்கு சரக்கு தளங்கள் அமைத்தல், குறைந்த ஆழம் கொண்ட கப்பல் தளம் அமைத்தல் ஆகியவை நிறைவேற்றப்படும். ஏப்ரல் 19ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.
2011ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் நவம்பர் 19ம் தேதி நிறுத்தப்பட்டது. அதுவரை 12 ஆயிரத்து 220 பயணிகள் பயணம் செய்தனர். பெரிய கப்பலாக விடப்பட்டதால் பராமரிப்பு செலவுகள், போதுமான பயணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து கப்பல் போக்குவரத்தை நடத்த முடியவில்லை. தற்போது 480 பயணிகள் செல்லும் வகையில் நடுத்தர வகை கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினரும், இந்திய கப்பல் கழகத்தினரும், செய்து வருகின்றனர். ஏப்ரல் 19ம் தேதி முதல் ‘பிளமிங்கோ லயனர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். இவ்வாறு சுப்பையா கூறினார்.
No comments:
Post a Comment