Monday, April 2, 2012

அமெரிக்காவுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க!

Monday, April 02, 2012
இலங்கை::அமெரிக்காவுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க:-

அமெரிக்காவுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக அரசியலமைப்பின் 157ஆவது பிரிவின் பிரகாரம் கடும் நடவடிக்கை அவசியம். இனியும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்று இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் குறித்து அரசாங்கம் விசாரணை செய்யும். ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணப்படுகின்ற அதிகாரப்பகிர்வு போன்ற தேசிய அரசியலுடன் தொடர்புபட்ட விடயங்களை ஒரு போதும் அமுல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அமெக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு விடயத்தை உறுதியாக கூற விரும்புகின்றோம். இலங்கை ஒரு சுயாதீன நாடு. எனவே, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட அதிகாரம் கிடையாது. மீறி தலையிடுவது அநாகரிகமான செயலாகும்.

ஜெனீவாவின் தீர்மானங்களின்படி இலங்கை நடக்காது. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை.

ஆனால், யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்ற விடயங்கள் தொடர்பில் இராணுவத்திடம், கடற்படை மற்றும் ஏனைய படைகளிடம் உள்நாட்டு விசாரணைகளை செய்ய முடியும்.

இது ஜெனீவா தீர்மானத்திற்கு அடிபணிந்து அல்ல.

அத்தோடு உள்நாட்டில் அரசியல் தீர்வை ஏற்படுத்துதல், வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசுவதற்கு எந்தவொரு அந்நிய நாட்டிற்கும் உரிமையில்லை.
எமக்கென்று நீதிமன்றங்கள் உள்ளன.

அத்தோடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் உள்ளது. இவற்றைவிட மிஞ்சிய சக்தியாக சர்வதேசத்தை இலங்கை அரசு ஒரு போதும் கருதாது.

எவ்வாறாயினும் சம்பந்தன் குழுவினர் உள்நாட்டில் இருந்து கொண்டே பாரிய துரோகத்தனங்களை செய்து வருகின்றனர். அரசாங்கம் இவர்கள் விடயத்தில் இனியும் பொறுமைகாக்கக் கூடாது.

நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை வெளிப்படையாக தண்டிக்க வேண்டும்.

இல்லையென்றால் நாட்டைப் பாதுகாப்பதில் நாம் தோல்வி கண்டு விடுவோம். அரசியலமைப்பின் 157ஆவது பிரிவின்படி தேசத்துரோகிகளுக்கு என்ன தண்டனையோ அதனை சம்பந்தன் குழுவிற்கும் வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment