Wednesday,April,25,2012புதுடெல்லி::இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கையில் மேற்கொண்ட விஜயம் குறித்து, கடந்த திங்கட் கிழமை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விபரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழுவுக்கு தலைமை வகித்த பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா தலைவர் சுஸ்மா சுவராஜ் இதனை நேற்று செய்தியளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், மற்றும் வெளிநாட்டு செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் உடனிருந்தனர்.
இலங்கையின் விஜயத்தின் போது, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் 13ம் திருத்தச் சட்டம் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதிக்கு தாம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரியதாக அவர் தெரிவித்தார்.
எனினும் அவர்களை இதில் பங்கேற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், ஒரே இலங்கையில் தீர்க்கப்பட்ட அரசியல் தீர்வு ஒன்றையே தமிழ் தரப்பு எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் நாட்டினை பிரிக்க நினைக்கவில்லை எனவும் சுஷ்மா சுவராஜ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கை அரசாங்கத்தின் குழந்தை போன்றது.
இதனை அடிப்படையாக கொண்டே தீர்வினை முன்னெடுக்க வேண்டும் எனவும், இதன் பொருட்டே இந்தியா, அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்ததாக இலங்கை அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
இலங்கை விஜயம் குறித்து சுஷ்மா சுவராஜ் பிரதமரிடம் விளக்கம்!
இந்திய மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தனது இலங்கை விஜயம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது, பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மதாய் ஆகியோரும் கலந்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கான விஜயம் குறித்து தாம் திருப்தியடைவதாக பிரதமரிடம் தெரிவித்ததாக சுஷ்மா சுவராஜ் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சிறந்த மட்டத்தில் காணப்படுவதுடன் குறிப்பிட்ட கால அட்டவணையின் பிரகாரம் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
தமது தலைமையிலான நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு, இலங்கையின் வட பகுதிகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை கண்காணித்ததாகவும் சுஷ்மா சுவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது பெண்கள் மற்றும் சிறுவர்களை சந்தித்ததாகவும் பெண்களின் கணவன்மார் தொழில்களுக்கு சென்றிருந்ததாகவும் மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான தமது விஜயத்தின் போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டதாக ஊடக தகவல் குறிப்பிடுகின்றது.
No comments:
Post a Comment