Tuesday, April, 17, 2012இலங்கை::ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு அந்நாட்டு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் நேற்று இரவு இலங்கை வந்தடைந்தது.
கொழும்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பை அடுத்து நாளையும், மறுதினமும் வடபகுதிக்கும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராயவுள்ளனர்.
இலங்கை பாராளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்யும் இந்திய பாராளுமன்றக் குழுவினர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா வழங்கும் விருந்துபசாரத்திலும் இந்தக் குழு கலந்து கொள்ளவுள்ளது.
பிரதமர் டி. எம். ஜயரட்ன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்தித்து இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
வடக்கில் இரண்டு நாள் தங்கியிருக்கும் இந்தக் குழு வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராயவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
மதவாச்சியிலிருந்து வட பகுதிக்கான விஜயத்தை நாளை 18ம் திகதி ஆரம்பிக்கும் இந்தக் குழு இந்த அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில்வே பணிகளை பார்வையிடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் இக் குழு இந்திய அரசின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் பாடசாலைகளின் செயற்பாடுகளை பார்வையிடுவதுடன் முல்லைத்தீவு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் கையளிக்கவுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு கோம் பாவிலுக்கு விஜயம் செய்யும் அவர்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளதுடன் அங்குள்ள நிலைமைகளையும் கேட்டறியவுள்ளனர்.
அங்கிருந்து கிளிநொச்சிக்கு சென்று வீடமைப்பு திட்டங்களை பார்வையிடும் அக்குழு 19ம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் யாழ்ப்பாணம் தனங்கிளம்பு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தையும் பார்வையிடவுள்ளது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியுடன் காலை நேர விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் இந்திய பாராளுமன்றக்குழுவுக்கு வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், பொதுமக்களின் நலன்கருதிய செயற்பாடுகள், மீள்குடியேற்றம், அடிப்படை வசதிகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்க வுள்ளார்.
இந்திய பாராளுமன்றக் குழுவின் வடபகுதி விஜயத்தில் ஆளுநருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், வடமாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பாராளு மன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழு நல்லூர் கோயிலுக்கு விஜயம் செய்து அங்கு சமய வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளது.
இதேவேளை, தென்பகுதிக்கும் இந்தக் குழு விஜயம் செய்யவுள்ளது.
இந்தியாவின் உதவியுடன் தென்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில்வே வேலைத்திட்டங்களை பார்வையிடுவதுடன் மலையகத்தின் டிக்கோயா வைத்திய சாலைக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தொழிற் பயிற்சி நிலையத்தையும் பார்வையிடவுள்ளது.
இதேவேளை 21 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இந்திய பாராளுமன்றக் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன் போது ஜனாதிபதியினால் வழங்கப்படும் காலை நேர விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment