Thursday, April 26, 2012

இனந்தெரியாத பொருட்கள் குறித்து கவனம் செலுத்துக - இராணுவ ஊடகப் பேச்சாளர்!

Thursday, April, 26, 2012
இலங்கை::மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் இனந்தெரியாத பொருட்களை கையாள்வது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் கேட்டபோதே இராணுவ ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்தினை தெரிவித்தார்.

வீடொன்றின் முற்றத்தில் சிறுவர்கள் உருண்டை வடிவிலான பொருள் ஒன்றை கையிலெடுத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சிறுவர்களின் முன்பள்ளி ஆசிரியையான தாய் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிச்சம்பவத்தில் நான்கு வயது மற்றும் இரண்டரை வயதான இரண்டு பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.

என்ன வகையான வெடிபொருள் வெடித்துள்ளது என்பது தொடர்பில் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற வெடிபொருட்கள் குறித்து அந்தப் பிரதேசங்களில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், கவனக்குறைவு காரணமாகவே இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மக்கள் மீள்குடியேற்றப்படும் போது நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் கண்ணுக்குப் புலப்படுமாயின் அதுகுறித்து அருகிலுள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு உடன் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment