Monday, April 9, 2012

நக்சலைட்டுகள் பதுங்கலா?: ஏற்காடு மலையில் அதிரடிப்படையினர் திடீர் சோதனை!

Monday, April, 09, 2012
சேலம்::சேலம் மாவட்டம் மேட்டூர் அதிரடிப்படை முகாம் வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் ஏற்காடு மலையில் உள்ள மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மலை கிராமங்களில் வாழும் மக்களை சந்தித்து அறிமுகம் இல்லாத நபர்கள் யாராவது இந்த பகுதியில் இருக்கிறார்களா? என்று கேட்டனர். மேலும் அதுபோல் யாராவது இருந்தால் அவர்களை பற்றி தகவல் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து அதிரடிப்படை வீரர்கள் பத்திப்பாடி வேலூர் கிராமத்தையொட்டி அமைந்துள்ள பன்னிக்கரடு, ஆத்தூர் காட் ஆகிய பகுதிகளின் வழியாக அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தனர். காட்டுக்குள் சம்மந்தமில்லாதவர்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? மரங்களை வெட்டிக்கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதா? கள்ளக் சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

காட்டுக்குள் சென்ற அதிரடிப்படை வீரர்கள் நவீனரக எந்திர துப்பாக்கிகள், நீண்டதூரம் பார்க்கும் வசதிகொண்ட பைனாகுலர் போன்ற நவீன உபகரணங்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிரடிப்படையினரின் இந்த அதிரடி நடவடிக்கை நக்சலைட்டுகள் வேட்டை என பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சசிக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த சோதனை வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான். குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படவில்லை. நக்சலைட்டுகள் யாரும் ஏற்காடு வனப்பகுதியில் இல்லை. வனகுற்றங்கள் ஏதாவது நடக்கிறதா? என்று தான் கண்காணித்தோம். ஆனால் இதை அனைவரும் மிகைப்படுத்தி விட்டனர் என்றார்.

No comments:

Post a Comment