Monday, April 16, 2012சென்னை::இலங்கை செல்லும் நல்லெண்ண குழுவில் இருந்து கடைசி நேரத்தில் விலகுவதாக திமுக அறிவித்திருப்பது இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
டெல்லியில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நல்லெண்ண குழுவில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டி.கே.எஸ்.இளங்கோவனும் இந்த பயணம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை செல்லும் நல்லெண்ண குழுவில் இருந்து திமுக இடம்பெறாது என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு நல்லெண்ண குழுவை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா - இலங்கை நல்லுறவை நீடிப்பதோடு உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் இதன் மூலம் பெறுகின்றது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், வீட்டு வசதி, உணவு, உடை உள்ளிட்ட வாழ்வாதரத்திற்காக இந்தியா உதவி செய்வதன் மூலம் அண்டை நாடுகளின் உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் தடுக்கும் ராஜதந்திர வழிமுறையாகும்.
ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூடங்குளத்தில் 2வது அனல் மின் நிலையம் ரஷ்யா உதவியோடு அமைக்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கப்படும் என்றார்.
இதேவேளை, கூடங்குளம் அணுமின் நிலைய செயற்பாடுகள் எதிர்வரும் 45 நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன்மூலம் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் மத்திய அமைச்சர் நாரயணசாமி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment